பாஜகவின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ – யார் இந்த நிதின் நபின்?
பாஜகவின் தேசிய செயல் தலைவராக வெறும் 45 வயதே ஆன நிதின் நபின் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதிலேயே இத்தனை முக்கியமான பொறுப்பு அவருக்கு ஏன் வழங்கப்பட்டது? அவரது பின்னணி என்ன? இந்த நியமனத்தின் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகள் என்ன? என்பதைக் குறித்து விரிவாக அலசுகிறது இந்தச் செய்தித் தொகுப்பு.
அதிரடித் தீர்மானங்களுக்கும் எதிர்பாராத முடிவுகளுக்கும் பெயர் பெற்ற கட்சியாக பாஜக நீண்ட காலமாகவே அறியப்படுகிறது. கட்சி மேலிடத்தின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை, அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகளே பல நேரங்களில் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதற்கு சிறந்த உதாரணமாக, தமிழக அரசியலில் இதற்கு முன்பு பெரிதாக அறியப்படாத அண்ணாமலையை திடீரென மாநிலத் தலைவராக அறிவித்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது பாஜக மேலிடம். ஆரம்பத்தில் கேள்விக்குறியாக இருந்த அந்த நியமனம், காலப்போக்கில் அவரது பின்னணி, செயல்பாடு மற்றும் கள அரசியல் திறமை வெளிப்பட்ட பிறகே, பாஜக தலைமையின் தொலைநோக்குப் பார்வை புரிந்தது.
அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவராக நியமித்ததும் பலரை வியப்பில் ஆழ்த்திய ஒரு முடிவாக அமைந்தது. இத்தகைய பல ‘சர்ப்ரைஸ்’ நியமனங்களின் வரிசையில் தற்போது புதிதாக சேர்க்கப்பட்ட பெயர்தான் நிதின் நபின். அவரே இப்போது பாஜகவின் தேசிய செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
தேசிய அளவில் அதிகம் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருப்பதே ஒரு வியப்பாக இருக்க, அவருக்கு இன்னும் 45 வயதுதான் என்பதும் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க வேண்டும், இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படியென்றால், நிதின் நபின் யார்?
1980ஆம் ஆண்டு பீகார் மாநிலம் பட்னாவில் பிறந்தவர் நிதின் நபின். அவரது தந்தை நவீன் கிஷோர் பிரசாத், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர். தந்தையின் மறைவுக்குப் பிறகு, 2006ஆம் ஆண்டு நிதின் நபின் அரசியல் வாழ்க்கையில் கால் பதித்தார்.
பங்கியூர் சட்டமன்றத் தொகுதியில் இதுவரை ஐந்து முறை போட்டியிட்டுள்ள நிதின் நபின், ஒவ்வொரு முறையும் வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளார். அந்த வெற்றிகள் சாதாரணமானவை அல்ல; ஐந்து முறையும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் பீகார் மாநில அரசில் கட்டுமானத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.
அவரின் நிர்வாகத் திறன், தலைமைக் குணம் மற்றும் களப்பணி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட பாஜக மேலிடம், 2019ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலத் தேர்தலுக்கான பொறுப்பாளராக அவரை நியமித்தது. அந்தப் பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றியதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, பீகார் மாநில பாஜக இளைஞரணி தலைவராகவும் செயல்பட்ட நிதின் நபின், பெருமளவு இளைஞர்களை கட்சிக்குள் ஈர்க்கும் பணியில் முக்கிய பங்காற்றினார்.
தனக்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியதன் பலனாக, அவரது திறமையை தேசிய அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு பாஜக தலைமை வந்தது. அதன் விளைவாகவே, தற்போது அவருக்கு தேசிய செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
45 வயதில் இந்த அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, கட்சிக்குள் உள்ள இளைஞர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. கட்சிக்காக உழைத்தால், தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இளைஞர்களிடமும், நிர்வாகிகளிடமும் விதைக்கும் முயற்சியாகவும் இந்த நியமனம் கருதப்படுகிறது.
மேலும், குடும்ப அரசியல் ஆதிக்கம் செலுத்தும் சில கட்சிகளைப் போல இல்லாமல், கட்சிக்காக உழைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய வாய்ப்பும் அங்கீகாரமும் வழங்கப்படும் என்பதை பாஜக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. பிராந்திய அரசியலிலும், தேசிய அரசியலிலும் பாஜக தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்து வருவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.