செய்தியாளர்களின் கேள்வியால் எரிச்சலடைந்த யோகி பாபு : கடுமையான பதில்
திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நடிகர் யோகி பாபு கடும் தொனியில் பதிலளித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப் நடித்துள்ள ‘மார்க்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னை நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் யோகி பாபுவிடம், சில திரைப்படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதில்லை என்ற விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த யோகி பாபு, அந்தக் கேள்வி தேவையற்றது என்ற போக்கில், சற்று கடுப்புடன் விளக்கம் அளித்தார். குறிப்பிட்ட ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்பதற்கு பதிலாக, அந்த நிகழ்ச்சி நடந்த உடனே கேள்வி எழுப்பியிருக்க வேண்டும் என்றும், ஒரு வாரம் கழித்து இப்போது கேட்பது பொருத்தமற்றது என்றும் அவர் கூறினார்.
மேலும், அந்தப் படத்தில் தான் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடித்ததாகவும், அப்படியானால் அந்தப் படத்தின் விளம்பர விவரங்களை அந்தப் படத்துக்கான நிகழ்ச்சியிலேயே கேட்க வேண்டும் என்றும், தற்போது நடைபெறும் இந்தப் படத்தின் நிகழ்ச்சியைப் பற்றிய கேள்விகளையே கேட்க வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் அவர் எரிச்சலுடன் தெரிவித்தார்.
அதே நிகழ்வில், யூடியூபர் ஒருவர் எழுப்பிய கேள்வி நடிகர் கிச்சா சுதீப்பையும் சற்றே அதிருப்தியடையச் செய்தது. நிகழ்ச்சியின் போது நடிகைகள் ஓரமாக அமர வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, அதற்கான காரணம் என்ன என்று அந்த யூடியூபர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கிச்சா சுதீப், இது சாதாரணமாக நடைபெறும் நடைமுறைதான் என விளக்கமளித்தார். பின்னர், அந்தக் கேள்விக்கு பதிலாக செயலில் காட்டும் விதமாக, இரு நடிகைகளையும் நடுவில் அமரச் செய்து, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் தானே அமர்ந்து கொண்டார்.