இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம்
சுமார் ஆறு தசாப்தங்களுக்கு முன் இமயமலைப் பகுதியில் தடம் மாறிய ஒரு அணுசக்தி சாதனம், இன்றளவும் விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கருவி எதற்காக நிறுவப்பட்டது? அது எவ்வாறு காணாமல் போனது? அதன் பின்னணி குறித்து இச்செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
1962ஆம் ஆண்டு இந்தியா–சீனா இடையே நடைபெற்ற போர், இந்தியாவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த மோதலில் இந்தியா பல பகுதிகளை இழந்ததுடன், பாதுகாப்பு ரீதியாகவும் பெரும் அழுத்தத்தை சந்தித்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சீனா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன் மூலம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குறித்து புதிய அச்சம் உருவானது.
இந்த சூழ்நிலையில், எல்லைப் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகளைத் துல்லியமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் இந்திய அரசுக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அணு ஆயுத சோதனைகள் அல்லது ஏவுகணை இயக்கங்கள் நடைபெறுகிறதா என்பதை முன்கூட்டியே அறிய வழிகள் தேடப்பட்டன.
பல ஆலோசனைகளுக்குப் பிறகு, சீனா எல்லையை கண்காணிக்க இமயமலையில் ஒரு உயரமான சிகரத்தில் அணுசக்தியால் இயங்கும் கண்காணிப்பு கருவியை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள நந்தாதேவி சிகரம் தேர்வு செய்யப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது உயரமான மலைச்சிகரமான இதிலிருந்து சீனப் பகுதிகளை கண்காணிக்க முடியும் என கருதப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA தொழில்நுட்ப உதவியையும் வழங்கியது. திட்டமிட்டபடி, நந்தாதேவி சிகரத்தில் அந்தக் கருவி நிறுவப்பட்டது. அது RTG (Radioisotope Thermoelectric Generator) எனப்படும் அணுசக்தி மின்உற்பத்தி சாதனத்தின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
RTG என்பது ஒரு வகையான அணுக்கரு மின்கலமாகும். இதில் உள்ள கதிரியக்க ஐசோடோப் சிதைவடையும்போது உருவாகும் வெப்பம், மின்சாரமாக மாற்றப்படுகிறது. பெரும்பாலும் புளூட்டோனியம்-238 என்ற கதிரியக்கப் பொருள் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நேரடி மின்சார வசதி கிடைக்காத இடங்களில் நீண்ட காலம் மின்சாரம் வழங்க இந்த கருவி பயன்படுகிறது.
இவ்வகை RTG ஜெனரேட்டர்கள் விண்வெளி ஆய்வுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாசா அனுப்பிய வாயேஜர் விண்கலங்களுக்கும், செவ்வாய் கிரகத்தில் செயல்படும் ரோவர்களுக்கும் இதே தொழில்நுட்பம் மின்சாரம் வழங்கி வருகிறது.
அதே முறையில்தான் நந்தாதேவி சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியும் செயல்பட்டு வந்தது. ஆனால், சில ஆண்டுகள் கழித்து அந்த கருவியும், அதனுடன் இணைக்கப்பட்ட RTG ஜெனரேட்டரும் திடீரென மாயமானது. சிலர் அவை கடும் பனிப்பொழிவில் புதைந்திருக்கலாம் என்றனர். மற்றவர்கள் பனிச்சரிவு காரணமாக அவை அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறினர். ஆனால், இதுவரை அவற்றின் இருப்பிடம் உறுதியாக கண்டறியப்படவில்லை.
இன்றளவும், அந்த அணுசக்தி கருவி நந்தாதேவி மலைத்தொடரின் ஏதோ ஒரு பகுதியில் புதைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இது விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம், RTG ஜெனரேட்டர் வெடிக்காது என்றாலும், அதில் உள்ள கதிரியக்கப் பொருட்கள் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக, இமயமலையில் உருவாகும் நதிகள் வழியாக கதிரியக்கப் பொருட்கள் பரவினால், அது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் ஆபத்தை விளைவிக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
இந்த அபாயத்தை உணர்ந்த விஞ்ஞானிகள், 1978ஆம் ஆண்டில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். நந்தாதேவி மலைப்பகுதியில் இருந்து உருவாகும் நீர்நிலைகளில் கதிர்வீச்சு தாக்கம் உள்ளதா என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இது அக்காலத்தில் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியது.
எனினும், அந்த RTG கருவி புதைக்கப்பட்டு இப்போது 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை என்ன என்பது தெரியாததால், எதிர்காலத்தில் கதிரியக்க பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு முற்றிலும் மறுக்க முடியாது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.