1971-ல் பாகிஸ்தானை முழுமையாக தோற்கடித்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ உருவான பின்னணி
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி, ‘விஜய் திவஸ்’ என தேசிய அளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் வரலாற்றுச் சம்பவங்கள் என்ன என்பதை இச்செய்தி தொகுப்பு விளக்குகிறது.
1971 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர், இந்திய ராணுவ வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்த ஒரு தீர்மானகரமான யுத்தமாகக் கருதப்படுகிறது. இந்தப் போரின் முடிவில், டிசம்பர் 16 அன்று, பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 93 ஆயிரம் வீரர்கள் இந்திய படைகளிடம் சரணடைந்தனர். இந்த வெற்றியின் விளைவாக, கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசம் என்ற புதிய சுயாதீன நாடு உருவானது.
இந்த வரலாற்றுப் பெருமைமிக்க வெற்றி எளிதில் கிடைத்த ஒன்றல்ல. அதற்குப் பின்னால் பல இந்திய வீரர்களின் அபார தைரியமும், உயிர்த் தியாகமும் இருந்தன.
சமீப காலமாக வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் இந்திய உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் தைரியமான செயல்பாடுகளை எடுத்துரைத்துள்ள நிலையில், 1971 போர் காலத்திலும் இதுபோன்ற பல துணிச்சல்மிக்க வீரர்கள் நாட்டின் வெற்றிக்காக தங்கள் உயிரையே அர்ப்பணித்ததை நினைவுகூர வேண்டிய தருணம் இது.
அத்தகைய வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் லெஃப்டினண்ட் கர்னல் பவானி சிங். அவரது தலைமையிலான சிறிய படைப்பிரிவு, பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் 80 கிலோமீட்டர் ஆழமாக நுழைந்து, 20 எதிரி வீரர்களைச் சிறைபிடித்தது. இந்த நடவடிக்கை இந்திய வெற்றிக்கான முக்கியத் தளமாக அமைந்தது.
மொத்தமாக 13 நாட்கள் மட்டுமே நீடித்த இந்தப் போர், டிசம்பர் 3 ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை இந்திய விமானத் தளங்களைத் தாக்கியதன் மூலம் தீவிரமடைந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முழு அளவிலான போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. குறிப்பாக கிழக்கு பாகிஸ்தானில் இந்திய படைகள் வேகமாக முன்னேறின.
இந்த முழுப் போர்திட்டத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தியவர் ஃபீல்டு மார்ஷல் சாம் மானேக்ஷா. அவரது உறுதியான முடிவுகளும், கூர்மையான ராணுவத் தந்திரங்களும் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்தன. அவரது வாழ்க்கை வரலாறு ‘சாம் பஹதூர்’ என்ற திரைப்படமாக உருவாக்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதேபோல், கிழக்கு பாகிஸ்தானில் 4வது படைப்பிரிவை வழிநடத்திய ஜெனரல் சாகத் சிங், தலைமையின் சில உத்தரவுகளை மீறி, ஹெலிகாப்டர்கள் மூலம் மேக்னா ஆற்றைக் கடந்து திடீர் தாக்குதல் நடத்தினார். இதன் மூலம் வெறும் 36 மணி நேரத்தில் 4,000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் எதிரி நிலப்பகுதிக்குள் நுழைந்தனர். இந்த எதிர்பாராத தாக்குதல் பாகிஸ்தான் படைகளை நிலை குலையச் செய்தது.
இந்தப் போரின் இறுதிக்கட்டத்தில், வெறும் 21 வயதான 2ம் லெஃப்டினண்ட் அருண் கேதர்பால், பல எதிரி டாங்கிகளை அழித்து, பாகிஸ்தான் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தினார். கடுமையாக காயமடைந்த நிலையிலும் போர்க்களத்தை விட்டு விலக மறுத்த அவரது வீரச்செயல் இந்திய வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
மேலும், கிழக்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தளபதியாக இருந்த லெஃப்டினண்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா, டாக்கா நகரை நான்கு திசைகளிலும் முற்றுகையிட்டு பாகிஸ்தான் படைகளை முழுமையாக சரணடையச் செய்தார். பாகிஸ்தான் தளபதி நியாஸி சரணடைந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட தருணத்தில், அருகில் இருந்த இந்திய தளபதி ஜக்ஜித் சிங் அரோராதான்.
இவ்வாறு, 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 16, இந்திய ராணுவத்தின் வலிமையும், வீரர்களின் தியாகமும் உலக அரங்கில் ஒலித்த நாளாகப் பதிந்தது. அந்த மகத்தான வெற்றியை நினைவுகூரும் வகையில், இந்தியா ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளை ‘விஜய் திவஸ்’ எனக் கொண்டாடி, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தி வருகிறது.