இந்திய பொறியியல் துறை ஏற்றுமதி மீண்டும் உயர்வு
அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட கடுமையான சரிவைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி மீண்டும் அதிகரித்துள்ளதாக இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்படும் எனக் கூறி, இந்தியப் பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் 50 சதவீத சுங்கவரி விதித்தது. இதன் காரணமாக, இந்தியாவின் ஏற்றுமதி துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை மீண்டும் வலுப்படுத்த இரு நாடுகளும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், தற்போது பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி மீளத் தொடங்கியுள்ளதாக, இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் பங்கஜ் சாதா தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் பொறியியல் துறையின் ஏற்றுமதி மதிப்பு 8.9 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், பொறியியல் ஏற்றுமதி 4.25 சதவீதம் வளர்ச்சி பெற்று, மொத்தமாக 79.74 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வளர்ச்சி, இந்திய பொறியியல் துறையின் தாங்கும் திறனையும், உலகளாவிய வர்த்தக சூழ்நிலைகளுக்கு தன்னை மாற்றிக் கொள்ளும் இந்தியாவின் வலிமையையும் வெளிப்படுத்துவதாக பங்கஜ் சாதா தெரிவித்துள்ளார்.