திரைமோகத்தில் சிக்கி சிதைந்த வாழ்க்கை : தலைகீழாக மாறிய பிளாஸ்டிக் சர்ஜரி பயணம்
சீனாவில் ஒரு பிரபல நடிகையைப் போல தோற்றமளிக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட பெண்ணின் வாழ்க்கை, எதிர்பாராத வகையில் முற்றிலும் மாற்றம் கண்டுள்ளது. புகழ், பணம், பிரபலம் என உச்சத்தைத் தொட்ட அவரது பயணம், பின்னர் பல சிக்கல்கள் மற்றும் மனவேதனைகளால் சூழப்பட்டுள்ளது. அந்த பெண் யார்? அவருடைய வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? இந்த சிறப்பு செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
சீனாவைச் சேர்ந்த ஃபேன் பிங்பிங் (Fan Bingbing) உலகளவில் புகழ்பெற்ற முன்னணி நடிகை. ‘மை ஃபேர் பிரின்சஸ்’ போன்ற தொலைக்காட்சி தொடர்களும், ‘செல்போன்’ (2003) உள்ளிட்ட திரைப்படங்களும் அவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்றன. இதன் காரணமாக உலகம் முழுவதும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவானார்கள். அந்த ரசிகர்களில் ஒருவர்தான் ஹீ செங்ஸி (He Chengxi).
சீனாவில் ஃபேன் பிங்பிங் எந்த அளவுக்கு புகழ் பெற்றாரோ, அதே அளவுக்கு ஹீ செங்ஸியும் ஒரு கட்டத்தில் பிரபலமானார். அதற்குக் காரணம் அவரது தோற்றம். செல்வ வளமிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஹீ செங்ஸி, ஃபேன் பிங்பிங்கின் அழகில் மயங்கி, அவரைப் போலவே தன்னை மாற்றிக்கொள்ள தீர்மானித்தார்.
இந்த இலக்கை அடைய, அவர் 37 முறைகள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, தனது முகம் மற்றும் உடலமைப்பை முழுமையாக மாற்றினார். இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய் வரை செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் சீன ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாற, தொலைக்காட்சிகளும் செய்தித்தாள்களும் அவரைப் பற்றி தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டன.
அதன் விளைவாக, நாடு முழுவதும் ஹீ செங்ஸி பிரபலமானார். “லிட்டில் ஃபேன் பிங்பிங்” என்ற பெயராலும் அவர் அழைக்கப்பட்டார். இதையடுத்து, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. இதே காலகட்டத்தில், தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் யூ சியாவோகுவானுடன் அவருக்கு காதல் உருவானது. இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், ஹீ செங்ஸியை மேலும் கவர்வதற்காக, அந்த மருத்துவரும் ஃபேன் பிங்பிங்கின் காதலரைப் போல தோற்றமளிக்க அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டார்.
இந்த வித்தியாசமான தம்பதி, சீனா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மேலும் பிரபலமடைந்தனர். இதனுடன், பிறருக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நோக்கில் ஒரு தனியார் மருத்துவமனையையும் அவர்கள் தொடங்கினர். அந்த மருத்துவமனைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எல்லாம் சிறப்பாகச் சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு நாள் ஹீ செங்ஸியின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
அவருடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை ஹீ செங்ஸி கண்டறிந்தார். இதனால் அவருடைய திருமண வாழ்க்கை முற்றிலும் முறிவடைந்தது. இந்த அதிர்ச்சிக்கு மேலாக, யாரைப் போல தன்னை மாற்றிக்கொண்டாரோ அந்த நடிகை ஃபேன் பிங்பிங், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சிக்கினார். ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான மோசடி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததால், நாடு முழுவதும் அவருக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், திரைப்படங்களில் நடிக்க சீன அரசு அவருக்கு தடை விதித்தது.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஹீ செங்ஸியின் வாழ்க்கையிலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தின. சமூக வலைதளங்களில் பயனர்கள் அவரை கேலி செய்யத் தொடங்கினர். அண்டை வீட்டாரும் அவரை விமர்சன பார்வையுடன் பார்க்க ஆரம்பித்தனர். நடிப்பு வாய்ப்புகள், புகழ், பிரபலம் என அனைத்தும் ஒரே நேரத்தில் மங்கிப் போனது.
இதனால் மனம் உடைந்த ஹீ செங்ஸி, மீண்டும் தனது இயல்பான தோற்றத்திற்குத் திரும்ப முடிவு செய்தார். அதற்காக மறுபடியும் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். தற்போது அவர் ஃபேஷன் சார்ந்த காணொளிகளை வெளியிட்டு வருவதுடன், அதனைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதி வருகிறார். மீண்டும் துணை நடிகையாக நடிக்கவும் அவர் முயற்சி செய்து வருகிறார்.
ஹீ செங்ஸியின் இந்த வாழ்க்கை கதை, தற்போது இணையத்தில் மீண்டும் பரவலாக கவனம் பெற்றுள்ளது. நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீதான அளவுக்கு மீறிய மோகத்தால், தங்களின் அடையாளத்தை இழக்கும் பலருக்கும், ஹீ செங்ஸியின் அனுபவம் ஒரு எச்சரிக்கை பாடமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.