பேருந்தில் நடிகர் திலீப்பின் திரைப்படம் திரையிடப்பட்டதற்கு பெண் பயணி எதிர்ப்பு!
கேரளாவில் இயக்கப்பட்டு வந்த பேருந்தில் நடிகர் திலீப் நடித்த பறக்கும் தளிகா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதை எதிர்த்து, பெண் பயணி ஒருவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகை ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளான வழக்கில், நடிகர் திலீப்பை குற்றவாளியாகக் குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கில், எர்ணாகுளம் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், நடிகர் திலீப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, அவரை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் A1 முதல் A6 வரை உள்ள 6 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. A8 ஆக குற்றம் சுமத்தப்பட்டிருந்த திலீப் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என கேரள நடிகைகள் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், திருவனந்தபுரத்திலிருந்து தொட்டில்பாலம் நோக்கி சென்ற பேருந்தில் நடிகர் திலீப் நடித்த பறக்கும் தளிகா திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை கண்ட பெண் பயணி ஒருவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
பெண் பயணியின் எதிர்ப்பை தொடர்ந்து திரைப்பட ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டது. இதனால் படத்தை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த சில ஆண் பயணிகள் கோபமடைந்து, அந்த பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பேருந்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.