குழந்தைகளை அச்சுறுத்தும் ‘கிராம்பஸ்’ அணிவகுப்பு – ஜெர்மனியில் வித்தியாசமான கிறிஸ்துமஸ் பாரம்பரியம்
ஜெர்மனியில் குழந்தைகளை அச்சமூட்டும் பேய் உருவ கதாபாத்திரங்கள் அணிவகுத்துச் செல்லும் ‘கிராம்பஸ்’ ஊர்வலம் வழக்கம்போல் இந்த ஆண்டும் நடத்தப்பட்டது.
உலகின் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை சாண்டா கிளாஸ், பரிசுகள், மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வுகளுடன் கொண்டாடப்படும் நிலையில், தென் ஜெர்மனியின் முனிச் நகரில் அதற்கு மாறாக அச்சமூட்டும் தோற்றத்துடன் கூடிய கிராம்பஸ் அணிவகுப்பு நடைபெற்றது.
மத்திய ஆல்பைன் பகுதிகளின் நாட்டுப்புறக் கதைகளில் இடம்பெறும் பேய் போன்ற உருவமே கிராம்பஸ். தவறாக நடக்கும் குழந்தைகளை தேடி பிடித்து, பிர்ச் மரக் குச்சியால் தண்டிப்பது அல்லது மிரட்டுவது என இந்தக் கதாபாத்திரம் தொடர்பான நம்பிக்கைகள் உள்ளன.
அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், ஆட்டுக் கொம்புகள், நீண்ட நாக்கு, அச்சமூட்டும் முகமூடிகள் மற்றும் கொடூரமான உடைகளுடன் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முனிச் நகரின் முக்கிய சாலைகளில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்தது.
வித்தியாசமான கிறிஸ்துமஸ் நிகழ்வாக இந்த கிராம்பஸ் அணிவகுப்பு ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.