அடர்ந்த பனிமூட்டம் ஏற்படுத்திய கோர விபத்து: தொடர்ச்சியாக மோதிய வாகனங்களில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு
டெல்லி–ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக, ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதே சூழலில், உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள டெல்லி–ஆக்ரா விரைவுச்சாலையில், முன்னால் வரும் வாகனங்கள் தென்படாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது.
இதன் விளைவாக, அந்த வழியாக சென்ற 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் மீது ஒன்றாக மோதின. விபத்து ஏற்பட்டதை உணர்வதற்குள், தொடர்ந்து மோதிய பேருந்துகளில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
உயிரைக் காக்க பயணிகள் அலறியடித்தபடி வாகனங்களில் இருந்து வெளியேறினர். இந்த விபத்தில் 5 பேருந்துகள் மற்றும் 2 கார்கள் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தன. தகவலின் பேரில் 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர், 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும், 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பேசிய ஒரு பயணி, அதிகாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வாகனங்களில் எரிந்த தீயை முழுமையாக அணைக்க தீயணைப்புத் துறையினர் போராடினர்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், கடும் பனிமூட்டம் நிலவும் அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.