நடிகையைப் போல் மாற ரூ.9 கோடி செலவு செய்த பெண்!
சீனாவில், பிரபல நடிகையை ஒத்த தோற்றத்தைப் பெறுவதற்காக சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பில் அழகியல் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, ஒரு பெண் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் அந்த நடிகை சிக்கிய பின்னர், அவரைப் போல உருவமாற்றம் செய்த அந்த பெண்ணின் வாழ்க்கையும் எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. சீனாவின் முன்னணி நடிகையாக அறியப்படும் ஃபேன் பிங்பிங்கால் ஈர்க்கப்பட்ட ஷென்சென் நகரைச் சேர்ந்த செல்வந்த பெண் ஹீ செங்சி, அவரைப் போலவே தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதன்படி, 2008 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 37 முறை அழகியல் அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டுள்ளார். இதில், இரட்டை கண் இமை அமைப்பதற்கான அறுவை சிகிச்சை மூன்று முறை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு மாற்றங்களுக்கு அவர் செலவிட்ட தொகை சுமார் 9 கோடி ரூபாயாகும்.
நடிகை ஃபேன் பிங்பிங்கை அச்சு அசலாக ஒத்த தோற்றம் பெற்றதன் காரணமாக, ஹீ செங்சிக்கு “லிட்டில் ஃபேன் பிங்பிங்” என்ற அடையாளப் பெயர் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அதே சமயத்தில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களில் ஒருவரான யூ சியாவோகுவானுடன் காதல் மலர்ந்து, பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். யூ சியாவோகுவானும், ஃபேன் பிங்பிங்கின் முன்னாள் காதலரான லி செனை ஒத்த தோற்றத்தைப் பெற பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.
இந்த தோற்ற ஒற்றுமையால், இந்த தம்பதி சீனா முழுவதும் பல்வேறு வணிக மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டனர்.
ஆனால், நடிகை ஃபேன் பிங்பிங் வரி ஏய்ப்பு சர்ச்சைகளில் சிக்கி, அவரது பொது புகழ் வீழ்ச்சியடைந்த பின்னர், “லிட்டில் ஃபேன் பிங்பிங்” என அறியப்பட்ட செங்சியின் வாழ்க்கையும் சிக்கலான நிலையை எதிர்கொண்டுள்ளது.