பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு
பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாஜக நாடாளுமன்றக் குழுவின் முடிவின் பேரில் நிதின் நபின் தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், பொறுப்பேற்க அவர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் முன்னோடிகளான ஷியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாத்யாயா ஆகியோரின் சிலைகளுக்கு நிதின் நபின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்வில், பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, அவரை நாற்காலியில் அமர வைத்து வாழ்த்தினார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், தேசிய செயல் தலைவராகப் பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.