உற்சாகத்தில் திளைத்த ரசிகர்கள் : ஜாம்பவான்களின் நினைவுகூரத்தக்க சந்திப்பு
இந்திய சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில், மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி கலந்துகொண்டார். அந்த நிகழ்வைச் சுற்றிய செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
GOAT Tour of India 2025 என்ற பெயரில் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள கால்பந்தாட்ட உலகின் மகத்தான வீரர் மெஸ்ஸி, தனது பயணத்தின் முதல் நாளில் கொல்கத்தாவுக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்காக அமைக்கப்பட்ட 70 அடி உயர சிலையை அவர் திறந்து வைத்தார். பின்னர் ஹைதராபாத் சென்ற மெஸ்ஸி, தெலங்கானா முதலமைச்சருடன் கால்பந்தாட்டம் விளையாடி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, தனது பயணத் திட்டத்தின் இரண்டாவது நாளில் மெஸ்ஸி மும்பையை வந்தடைந்தார். அவருடன் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் இணைந்து பயணம் செய்தனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ‘ஆல் ஸ்டார்ஸ்’ கால்பந்தாட்ட போட்டியை மெஸ்ஸி பார்வையிட்டார். அங்கு, சிறுவர் சிறுமிகள் மற்றும் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களுடன் இணைந்து மெஸ்ஸி சில நிமிடங்கள் விளையாடி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். பின்னர், மைதானத்தைச் சுற்றி வந்த அவர், பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிகளை நோக்கி கால்பந்துகளை வீசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அந்தப் பந்துகளைப் பிடித்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், மெஸ்ஸியை அன்புடன் வரவேற்றார். சந்திப்பின் போது, 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது அவர் அணிந்திருந்த தனது ஜெர்ஸியை மெஸ்ஸிக்கு பரிசாக வழங்கினார். அதற்கு பதிலாக, மெஸ்ஸி ஒரு கால்பந்தை சச்சினுக்கு நினைவுப் பரிசாக அளித்தார்.
கிரிக்கெட் உலகின் மாபெரும் வீரரும், கால்பந்தாட்டத்தின் மகத்தான நாயகனும் ஒரே மேடையில் சந்தித்த அந்த தருணம், ரசிகர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. அச்சமயம் பேசிய சச்சின், மெஸ்ஸி மும்பை வந்திருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்றும், அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் பணிவான அணுகுமுறை தன்னை ஆழமாகக் கவர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னணி வீரர் சுனில் சேத்ரி மெஸ்ஸியை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, மெஸ்ஸி தனது கையெழுத்துடன் கூடிய அர்ஜெண்டினா அணியின் ஜெர்ஸியை சுனில் சேத்ரிக்கு வழங்கினார். இந்த நிகழ்வைக் கண்ட ரசிகர்கள் “GOAT meets GOAT” என்ற கோஷங்களை எழுப்பி அரங்கத்தை அதிர வைத்தனர்.
பின்னர், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மெஸ்ஸி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஃபட்னாவிஸ், மெஸ்ஸியின் வருகை இந்திய இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்திய வீரர்களும் ஃபிஃபா உலக மேடையில் விளையாடும் நாளை காண்போம் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
இதனுடன், வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.