சமஸ்கிருதத்தின் மகத்துவத்திற்கு புதிய முத்திரை : பாகிஸ்தானில் கற்பிக்கப்படும் சமஸ்கிருத மொழி

Date:

சமஸ்கிருதத்தின் மகத்துவத்திற்கு புதிய முத்திரை : பாகிஸ்தானில் கற்பிக்கப்படும் சமஸ்கிருத மொழி

பாகிஸ்தானில் உள்ள ஒரு முக்கிய பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழி பாடமாக கற்பிக்கப்படுவது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் பின்னணியையும் முக்கியத்துவத்தையும் இச்செய்தித் தொகுப்பில் காணலாம்.

உலகில் தோன்றிய மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படுவது சமஸ்கிருதம். வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் போன்ற எண்ணற்ற இலக்கியங்கள் இம்மொழியிலேயே உருவானவை. மொழியியல் வளமும் இலக்கணத் துல்லியமும் கொண்ட இந்த மொழி, செம்மொழி என்ற உயரிய அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் சமஸ்கிருதத்தை பாடமாக கற்பித்து வருகின்றன.

இந்தியாவில் தற்போது 3 மத்திய பல்கலைக்கழகங்கள், ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் 14 மாநில பல்கலைக்கழகங்கள் சமஸ்கிருத கல்வியை வழங்குகின்றன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் சமஸ்கிருதம் பயில வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பல்வேறு நாடுகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், இஸ்லாமிய நாடாகக் கருதப்படும் பாகிஸ்தானில் இம்மொழி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதே இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

பாகிஸ்தானின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம், சமஸ்கிருத மொழியை பாடத்திட்டமாக கற்பித்து வருகிறது. பாகிஸ்தானில் பல மாணவர்கள் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள விருப்பம் காட்டியதன் விளைவாக, முதலில் மூன்று மாத குறுகிய காலப் பாடமாக இந்த மொழி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகுப்புகள் வார இறுதிகளில் மட்டும் நடத்தப்பட்டதால், முழுநேரமாக சமஸ்கிருதம் பயில விரும்பியவர்களுக்கு அது ஒரு சவாலாகவே இருந்தது.

ஆனால் மாணவர்களிடையே ஏற்பட்ட பெரும் வரவேற்பை தொடர்ந்து, லாகூர் பல்கலைக்கழகம் தற்போது சமஸ்கிருதத்தை முழுநேர பாடமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்கு முன் காலத்தில் லாகூர், சமஸ்கிருத கல்வியின் முக்கிய மையமாக விளங்கியதாகவும், அந்தப் பல்கலைக்கழகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், 1947 ஆம் ஆண்டு நாட்டுப் பிரிவுக்குப் பிறகு, அவற்றின் ஆய்வுகள் நிறுத்தப்பட்டன.

இந்த வரலாற்றுப் பின்னணியில்தான், தற்போது லாகூர் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சமஸ்கிருத கல்வி உயிர்ப்பெற்றுள்ளது. பார்மன் கிறிஸ்டியன் கல்லூரியில் சமூகவியல் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஷாஹித் ரஷீத் என்பவரே இந்த பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளார். மொழிகளின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்ட அவர், முதலில் அரபு மற்றும் பாரசீக மொழிகளை கற்றார். பின்னர் சமஸ்கிருதத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்டோனியா ரூப்பலிடமும், ஆஸ்திரேலிய அறிஞர் மெக்கோமாஸ் டெய்லரிடமும் சமஸ்கிருதம் பயின்றார்.

பாகிஸ்தானில் முதன்முறையாக மூன்று மாத சமஸ்கிருத பாடத்திட்டத்தை தொடங்கியவர் இவர்தான். முழுநேர சமஸ்கிருத பாடநெறி குறித்து கருத்து தெரிவித்த அவர், சமஸ்கிருதம் ஒரு மதத்துடன் மட்டும் தொடர்புடைய மொழி அல்ல என்றும், அது முழு பிராந்தியத்தையும் இணைக்கும் பாரம்பரிய மொழி என்றும் குறிப்பிட்டார். சமஸ்கிருதத்தை ஒரு மலைக்கு ஒப்பிட்ட அவர், அந்த மொழியை அனைவரும் தங்களுடையதாக உணர வேண்டும் என்றார்.

மேலும், இந்தியாவில் வாழ்பவர்கள் அரபு மொழியையும், பாகிஸ்தானில் வாழ்பவர்கள் சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொண்டால், மொழிகள் தடையாக இல்லாமல், இரு நாடுகளுக்கிடையே பாலமாக மாறும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். சமஸ்கிருத இலக்கணத்தின் தந்தை எனப் போற்றப்படும் பாணினி பிறந்த இடம் தற்போதைய பாகிஸ்தானில் அமைந்துள்ளது என்பதையும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

லாகூர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், எதிர்காலத்தில் பகவத் கீதை, மகாபாரதம் போன்ற நூல்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, வருங்கால 10 முதல் 15 ஆண்டுகளில் பாகிஸ்தானிலும் சமஸ்கிருத அறிஞர்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் பாடமாக கற்பிக்கப்படுவது, அந்த மொழியின் பெருமைக்கும் உலகளாவிய செல்வாக்கிற்கும் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனா–துருக்கி சதி : தவிர்க்க முடியாத இரண்டாம் கட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ – லெப்.ஜெ. துஷ்யந்த் சிங் எச்சரிக்கை

பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனா–துருக்கி சதி : தவிர்க்க முடியாத இரண்டாம் கட்ட...

விவசாயிகளை நம்பிக்கையூட்டி ஏமாற்றுவது தான் பாராட்டப்படும் நல்லாட்சியா? – முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் சவால்

விவசாயிகளை நம்பிக்கையூட்டி ஏமாற்றுவது தான் பாராட்டப்படும் நல்லாட்சியா? – முதல்வர் ஸ்டாலினுக்கு...

90ஸ் கிட்ஸ்களின் ஐகான் ஜான் சீனா – WWE ரிங்குக்கு விடை

90ஸ் கிட்ஸ்களின் ஐகான் ஜான் சீனா – WWE ரிங்குக்கு விடை மல்யுத்த...