இந்தியா – மலேசியா இணைந்த ராணுவப் பயிற்சி!
இந்தியா மற்றும் மலேசியா இணைந்து நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியான ஹரிமாவ் சக்தியின் 5-வது கட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
ஹரிமாவ் சக்தி எனப்படும் இந்தக் கூட்டுப் பயிற்சி, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் முக்கியமான ராணுவ ஒத்திகை நிகழ்வாகும்.
கடந்த ஆண்டு மலேசியாவின் பகாங் மாவட்டத்தில் அமைந்துள்ள பென்டாங் ராணுவ முகாமில் இந்தப் பயிற்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஹரிமாவ் சக்தி 2025 என்ற பெயரில் நடைபெறும் பயிற்சி, ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் உள்ள மகாஜன் ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பயிற்சி வரும் 18-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் இணைந்து தீவிரமாகப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளில் தாக்குதல் நடத்துதல், துறைமுக பகுதிகளை மீட்பது, ரோந்து பணிகள் மேற்கொள்வது, மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் உத்திகள், மேலும் தீவிரவாத கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு போர் சார்ந்த ஒத்திகைகள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் இடம்பெறுகின்றன.
இந்த இணைந்த ராணுவப் பயிற்சி, இந்தியா மற்றும் மலேசியா ராணுவங்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பையும், நம்பிக்கையையும், நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.