குல்மார்கில் தொடங்கப்பட்ட சுழலும் உணவகம் – சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தலமான குல்மார்கில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள அஃபர்வத் மலைச் சிகரத்தில் புதிய சுழலும் உணவகம் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் அரசு பல்வேறு புதிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. குல்மார்க் பகுதியில் இயங்கி வரும் கோண்டோலா கேபிள் கார் சேவை, பனியில் சறுக்கும் விளையாட்டுகள், இக்லூ கஃபே போன்றவை ஏற்கனவே பயணிகளின் கவனத்தை பெற்றுள்ளன.
அந்த வரிசையில், தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த சுழலும் உணவகம் குல்மார்க்கின் புதிய சிறப்பு அடையாளமாக உருவெடுத்துள்ளது.
இந்த உணவகத்தை ஜம்மு–காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். பனியால் மூடப்பட்ட மலைத்தொடர்கள், மேகங்கள் சூழ்ந்த இயற்கை அழகு மற்றும் காஷ்மீரின் பாரம்பரிய சமையல் முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை, மெதுவாகச் சுழலும் இந்த உணவகத்தில் அமர்ந்தபடி சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.
மேலும், பனி சறுக்கு விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களை கவரும் வகையில் ஸ்கீ டிராக் லிப்ட் வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டங்கள் மூலம் உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஜம்மு–காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.