ரீ–ரிலீஸ் செய்யப்பட்ட ‘படையப்பா’ படத்தை காண நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்
பிரான்ஸ் நாட்டில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, அதை காண ஏராளமான ரசிகர்கள் நீண்ட நேரம் க்யூவில் நின்று காத்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்த், சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், அவரது 75-வது பிறந்தநாளையொட்டி சூப்பர் ஹிட் படமான ‘படையப்பா’ கடந்த 12-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இந்த படம் தமிழகம், கர்நாடகா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் ரீ–ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த வரிசையில் பிரான்ஸிலும் ‘படையப்பா’ திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், அதை காண ரசிகர்கள் திரையரங்குகளுக்கு பெருமளவில் திரண்டனர்.
மேலும், பிரான்ஸில் உள்ள திரையரங்கில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். தொடர்ந்து, திரையிடப்பட்ட ‘படையப்பா’ படத்தை ஆட்டம், பாட்டம், உற்சாக ஆரவாரத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்.