போரில் வெற்றி கிடைக்க கம்போடியாவில் மாந்திரீக வழிபாடுகள்!
தாய்லாந்து – கம்போடியா எல்லைத் தகராறைத் தொடர்ந்து போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்தப் போரில் கம்போடியா வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அந்நாட்டு மக்கள் மாந்திரீக வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாய்லாந்தின் சுரீன் மாகாண எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பிரசாத் தா மோன் தோம் ஆலயத்தின் உரிமை குறித்து கம்போடியா உரிமை கோரியதன் காரணமாக, கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஆயுத மோதல் வெடித்தது. அந்தச் சண்டையில் 45 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாத இறுதியில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில், தாய்லாந்து – கம்போடியா நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆனால் தற்போது அந்த ஒப்பந்தம் மீறப்பட்டு மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சண்டையில் தாய்லாந்து ராணுவத்தைச் சேர்ந்த 15 வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், இந்த வார தொடக்கத்தில் மட்டும் கம்போடிய ராணுவ வீரர்கள் 165 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், போரில் கம்போடியா வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் அந்நாட்டு பழங்குடியினர் மாந்திரீக சடங்குகள் மற்றும் பூஜைகளில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.