வக்ஃபு நில பிரச்சினை உருவாக்கிய அரசியல் திருப்பம் – உள்ளாட்சி தேர்தலில் மாற்றம்
கேரளாவில் வக்ஃபு நில விவகாரத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், அரசியல் களத்தில் எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சர்ச்சைக்குரிய முனம்பம் வார்டில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த பின்னணியை விரிவாகப் பார்க்கலாம்.
எர்ணாகுளம் மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள முனம்பம் வார்டில், 2019 ஆம் ஆண்டில் நில உரிமை தொடர்பான சர்ச்சை வெடித்தது. அப்போது, முனம்பம் மற்றும் அதனை ஒட்டிய சேரை பகுதிகளில் உள்ள சுமார் 404 ஏக்கர் நிலம் வக்ஃபு சொத்து என கேரள வக்ஃபு வாரியம் அறிவித்ததே இந்தப் பிரச்சினையின் தொடக்கமாக அமைந்தது.
இதன் காரணமாக, பல தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வந்த லத்தீன் கத்தோலிக் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான குடும்பங்கள், தங்கள் வீடுகளை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக அச்சம் தெரிவித்தனர். தங்களிடம் உரிய நில ஆவணங்களும், நில வரி செலுத்திய சான்றுகளும் இருப்பதாக அவர்கள் வலியுறுத்தியபோதும், அரசு அப்பகுதியில் நில வரி வசூலை நிறுத்தியது. இதனால் குழப்பம் மேலும் தீவிரமடைந்தது. இதனை எதிர்த்து, முனம்பம் மக்கள் 400 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம், வக்ஃபு வாரியத்தின் அறிவிப்பில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், அந்த அறிவிப்பு சட்டப்பூர்வமாகப் பிழையானது என்றும் குறிப்பிட்டது. ஆனால், அந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால், முனம்பம் பகுதியின் சட்டநிலை இன்னும் உறுதியாகவில்லை.
இந்தச் சூழலில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், முனம்பம் வார்டில் NDA கூட்டணி கணிசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முன்னதாகவே, அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு பாஜக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தது.
இதன் விளைவாக, இதுவரை காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு வாக்களித்து வந்த சிலர், இம்முறை NDA கூட்டணியை ஆதரித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1,780 வாக்காளர்கள் கொண்ட முனம்பம் வார்டில், காங்கிரஸ் வசம் இருந்த இடத்தை NDA கைப்பற்றியது மாநில அரசியலில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் தாங்களும் முனம்பம் மக்களுக்கு துணைநின்றதாக விளக்கம் அளித்து வருகின்றன. அதே நேரத்தில், இந்தத் தேர்தல் முடிவு கேரளாவில் பாஜக பெற்ற முக்கிய அரசியல் அங்கீகாரமாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கிடைத்த முக்கிய ஊக்கமாகவும் கருதப்படுகிறது.