நீண்ட நேரக் காத்திருப்பு – புதினை சந்திக்க 40 நிமிடங்கள் எதிர்பார்த்த பாகிஸ்தான் பிரதமர்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க 40 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், திட்டமிட்ட சந்திப்பு நேரத்தை மீறி உள்ளே நுழைந்த சம்பவம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுடன் தன் நாட்டின் தூதரக உறவுகளை வலுப்படுத்த பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், புதின் இந்தியாவுடன் வெளிப்படையான மற்றும் உறுதியான ராஜதந்திர உறவைப் பேணி வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் புதின் வைத்திருக்கும் நெருக்கமான தொடர்புகளும், அவரது இந்திய பயணங்களும் உலக அரசியலில் குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ளன.
இந்தச் சூழலில், துர்க்மெனிஸ்தான் நாட்டின் நிரந்தர நடுநிலை அறிவிப்பின் 30-ஆவது ஆண்டு நினைவாக நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், புதின் – ஷெபாஸ் ஷெரிஃப் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், துருக்கி அதிபர் ரசிப் தயிப் எர்டோகனுடன் புதின் மேற்கொண்ட சந்திப்பு எதிர்பார்த்ததை விட நீண்டதால், திட்டமிட்ட நேரத்தில் ஷெபாஸ் ஷெரிஃப்பை சந்திக்க முடியவில்லை. இதன் காரணமாக, பாகிஸ்தான் பிரதமர் சுமார் 40 நிமிடங்கள் வரை இருக்கையில் அமர்ந்து காத்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.