AI துறையில் இந்தியாவின் வேகப்பாய்ச்சி : ரூ.6 லட்சம் கோடி முதலீடு குவியும் காலம்
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை மையமாகக் கொண்டு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் முதலீடுகளை அறிவித்துள்ளன. GOOGLE, AMAZON, MICROSOFT ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் சுமார் 67 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளன. இதன் மூலம் தொழில்நுட்ப உலகில் இந்தியா ஒரு புதிய எழுச்சிக் கட்டத்துக்குள் நுழைந்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வு செய்தால், புதிதாக கண்டுபிடிப்பை செய்தவர்கள் அல்ல; அதனை விரைவாக ஏற்றுக்கொண்டு மேம்படுத்தியவர்கள்தான் நீண்டகால வெற்றியை பெற்றுள்ளனர். இதே கோணத்தில் AI தொழில்நுட்பத்தை வேகமாக பயன்படுத்தி முன்னேறும் நாடுகளும் நிறுவனங்களுமே எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் என MICROSOFT நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தார்.
அவரது கணிப்பின்படி, AI போட்டியில் முன்னிலை பெறும் நாடாக இந்தியா உருவெடுக்கும். இதை முன்கூட்டியே உணர்ந்த MICROSOFT, அடுத்த நான்கு ஆண்டுகளில் 17.5 பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவிலான முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதுவரை இருபது ஆண்டுகளாக இந்தியா உலக IT துறைக்கு சேவை வழங்கும் மையமாக செயல்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களின் தேவையை நிறைவேற்றும் பணிகளில் இந்திய இளைஞர்கள் ஈடுபட்டனர். வேலைவாய்ப்பு கிடைத்தாலும், அடிப்படை தொழில்நுட்ப கட்டமைப்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனால் அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது.
இப்போது உலகின் பெருநிறுவன தலைவர்கள் நேரடியாக முதலீட்டு திட்டங்களுடன் இந்தியாவை நோக்கி வருகிறார்கள். இதை தொழில்நுட்ப உலகின் புதிய “தங்க வேட்டை” என நிபுணர்கள் வர்ணிக்கின்றனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று திறமையான மனித வளம். உலகளவில் உள்ள சிப் வடிவமைப்பு பொறியாளர்களில் சுமார் 20 சதவீதம் இந்தியர்களே. ஆங்கில அறிவும் தொழில்நுட்ப திறனும் கொண்ட மென்பொறியாளர்கள் அதிகம் இருப்பது இந்தியாவின் பலமாக உள்ளது.
மேலும், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி வெளிநாட்டு முதலீட்டாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 2014க்குப் பிறகு மத்திய அரசு மேற்கொண்ட UPI, DIGITAL INDIA, MAKE IN INDIA, STARTUP INDIA போன்ற திட்டங்கள் நாட்டை ஒரு பெரிய டிஜிட்டல் சந்தையாக மாற்றியுள்ளன. குறைந்த செலவில் இணைய வசதி, வேகமான பணப்பரிமாற்றம் போன்றவை இந்தியாவை உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பயனர்கள் கொண்ட நாடாக உருவாக்கியுள்ளன.
இந்த சூழலில், AMAZON நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 35 பில்லியன் டாலர், அதாவது ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து CLOUD COMPUTING துறைக்கு அதிக கவனம் செலுத்தும் அந்நிறுவனம், இந்தியாவை அதன் முக்கிய மையமாக தேர்ந்தெடுத்துள்ளது. இந்த முதலீட்டால் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பே GOOGLE நிறுவனம் 15 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப்பெரிய AI தரவு மையத்தை அமைக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களின் முதலீடுகளை ஒன்றிணைத்தால், மொத்தம் 67 பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.6 லட்சம் கோடி இந்தியாவுக்குள் வர உள்ளது. இதன் மூலம் இந்தியா உலக தொழில்நுட்ப வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் பன்மொழி, பன்முக சமூக அமைப்பு மற்றும் பரந்த தரவுகள் AI வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சூழலை உருவாக்குகின்றன. இந்தியாவில் செயல்படும் ஒரு AI மாதிரி உலகின் எந்த நாட்டிலும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பது தொழில்நுட்ப நிறுவனங்களின் நம்பிக்கை.
AI மட்டுமல்ல, CLOUD COMPUTING துறையிலும் இந்தியா முக்கிய மையமாக மாறி வருகிறது. MICROSOFT நிறுவனம் ஐதராபாத்தில் மிகப்பெரிய CLOUD மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை விட இரட்டிப்பு அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த முதலீடுகளால் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு SERVER மற்றும் AI சேவைகளின் மீது சார்ந்திருக்க வேண்டிய நிலை குறையும். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறும் என்றும், மேற்கு நாடுகளை விட அதிக முன்னேற்றம் காணும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அமெரிக்காவில் “அமெரிக்கா முதலில்” என்ற முழக்கங்கள் எழுந்தாலும், அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வருவது இந்தியாவின் வளர்ச்சி பாதையை உலகம் ஏற்றுக்கொண்டதற்கான சான்றாகும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் இருந்தாலும், முதலீட்டு வருகை இந்திய பொருளாதாரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பது உறுதி.
இந்தியாவின் தொழில்நுட்ப கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் தன்னிறைவு எதிர்காலத்தில் நாட்டை உலகின் முன்னணி சக்தியாக மாற்றும். 21ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழில்நுட்ப உலகின் தலைமையை இந்தியா ஏற்கும் காலம் தொலைவில் இல்லை.