அமெரிக்காவின் ரூ.5,700 கோடி ராணுவ நிதி – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!
பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களை மேம்படுத்துவதற்காக சுமார் ₹5,700 கோடி மதிப்பில் புதிய பாதுகாப்பு உடன்பாட்டிற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்மானம், ஆப்ரேஷன் சிந்தூர் போது பாகிஸ்தான் சந்தித்த பெரும் இழப்புகளை மறைமுகமாக உறுதி செய்கிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தியாவின் திடீர் மற்றும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல், பாகிஸ்தான் போரை நிறுத்த வேண்டிக் கொண்டது. இதைத்தொடர்ந்து நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த ஆபரேஷனின் போது, F-16 படைகளுடன், பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகள், தகவல் கட்டுப்பாட்டு மையங்கள், விமான ஹேங்கர்கள், ஓடு தளங்கள் போன்ற பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் அழிக்கப்பட்டன.
சிந்தூர் நடவடிக்கையில், அமெரிக்க F-16 மற்றும் C-130 விமானங்கள் மட்டுமல்லாது, சீனாவில் தயாரிக்கப்பட்ட JF-17, AEW&C போன்ற பல பாகிஸ்தானி விமானங்களும் இந்தியத் தாக்குதலால் சேதமடைந்தன. இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், பாகிஸ்தான் F-16 கள் வீழ்த்தப்பட்டதாக உறுதிப்படுத்தியபோதும், பாகிஸ்தான் அதனை மறுத்து, மாறாக ஆறு இந்திய விமானங்களை சுட்டதாகக் கூறியது. மேலும், ரஃபேல் போர் விமானத்தை வீழ்த்தியதாகவும் தவறான தகவலைப் பரப்பியது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் வான்வழி திறன் பெரிதும் பாதிக்கப்பட்டதை பாகிஸ்தானும் அமெரிக்காவும் மறைமுகமாக ஒப்புக்கொள்ள வேண்டிய சூழல் உருவானது. F-16 க்கான மேம்பட்ட கருவிகள், புதிய தொழில்நுட்பங்கள், பராமரிப்பு உபகரணங்கள் ஆகியவற்றிற்காக அமெரிக்கா ரூ.5,700 கோடி மதிப்பிலான உதவியை வழங்க முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு, இதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இந்தத் தொகுப்பில், ஆயுத ஒருங்கிணைப்பு முறைகளை மீளமைத்தல், தேவையான வன்பொருட்கள், avionics modules, crypto systems, OFP மேம்படுத்தல், பயிற்சி உதவிகள், முழுமையான தளவாட ஆதரவு ஆகியவை சேர்த்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதுப்பிப்பு திட்டம், பாகிஸ்தானின் F-16 களின் செயல்பாட்டு ஆயுள் 2040 வரை நீட்டிக்கப்படும் என்றும் அமெரிக்கா விளக்கியுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்காது என்றும் கூறியுள்ளது. இதன் மூலம், ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகள் மீது ஏற்படுத்திய சேதம் வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சேதமான ரேடார் அமைப்புகள், கண்காணிப்பு கருவிகள், தகவல் மையங்கள், போர் விமானங்கள் ஆகியவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காகவே இந்த நிதியுதவி அவசரமாக வழங்கப்பட்டிருப்பதாகவும் ராணுவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதேபோல், பாகிஸ்தானின் F-16 களை இந்தியா முன்பும் வீழ்த்திய வரலாறு உண்டு. 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த இந்தியாவின் பதிலடி நடவடிக்கையில், ஜம்மு–காஷ்மீரில் நுழைந்த பாகிஸ்தானி F-16 ஒன்றை இந்திய விமானப்படை வீழ்த்தியது நினைவுகூரத்தக்கது.