தடை விதிப்பை மீறி கச்சா எண்ணெய் கடத்தல் – அமெரிக்கப் படையினரால் கப்பல் கைப்பற்றப்பட்டது!
அமெரிக்கா விதித்த தடையை பொருட்படுத்தாமல், வெனிசுலாவில் இருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற ஒரு மிகப்பெரிய சரக்கு கப்பலை, வெனிசுலா கடற்கரையருகில் அமெரிக்கப் படை பறிமுதல் செய்துள்ளது.
வெனிசுலா கடற்கரையில் இருந்தே புறப்பட்ட இந்தக் கப்பல், தனது சரியான இருப்பிடத்தை மறைக்க தவறான ஜிபிஎஸ் / நிலைகாட்டி தகவல்களை ஒளிபரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் டிரான்ஸ்பாண்டர் சிக்னல்களில், அது கயானா–சுரினாம் கடற்பகுதியில், அட்லாண்டிக் பெருங்கடலில் நங்கூரமிட்டிருக்கிறது என்று போலியாக காட்டப்பட்டிருந்தது.
ஆனால் கப்பலின் இயக்கம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், செயற்கைக்கோள் கண்காணிப்பின் மூலம் நிஜமான இடம் சரிபார்க்கப்பட்டது. அதில், அக்டோபர் இறுதி வாரம் முதல் டிசம்பர் 4 வரை, கப்பல் வெனிசுலாவின் ஜோஸ் எண்ணெய் முனையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கப்பலில் சுமாராக 10 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், இதே கப்பல் ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளுக்கு இடையே பல முறை பயணித்திருப்பதும், சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு பல லட்சக்கணக்கான பேரல்கள் எண்ணெயை எடுத்துச் சென்றிருக்கிறது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனால் உடனடியாக ஹெலிகாப்டரில் சென்றடைந்த அமெரிக்க கடற்படை குழு, கப்பலை நேரடியாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பறிமுதல் செய்துள்ளது.