தென்கிழக்கு ஆசியாவை அதிரவைத்த புயல் பேரழிவு: டிட்வா போன்ற புயல்கள் வரும் காலத்திலும் உருவாகலாம்
சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா மற்றும் சென்யார் புயல்கள் ஏன் இத்தனை பெரும் சேதத்தை ஏற்படுத்தின என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய விளக்கத்தை தெரிவித்துள்ளனர். இதைப் பற்றிய விரிவான தகவல்கள் பின்வருமாறு:
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சமீபத்தில் உருவான சென்யார், டிட்வா உள்ளிட்ட புயல்கள் மிகுந்த உயிரிழப்பை ஏற்படுத்தின. இந்தோனேஷியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; மேலும் 250-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகச் செய்திகள் கூறுகின்றன.
இலங்கையில் 600-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மலேசியாவில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். தாய்லாந்தில் மட்டும் 181 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அனைத்து நாடுகளிலும் சேர்த்து பல பில்லியன் டாலர் மதிப்பில் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த புயல்கள் எதிர்பாராத விதமாக எதற்காக இத்தனை வேகமாக வலுவடைந்தன என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். அவற்றில் முக்கியமான காரணமாக காலநிலை மாற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக வங்காள விரிகுடாவிலும், இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியிலும் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துள்ளதால், இந்த இரண்டு புயல்களும் திடீரென மிகுந்த சக்தியை பெற்றதாக விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். மேலும், காடுகள் அழிப்பு, நில அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவை புயல்களின் தீவிரத்தைக் கூட அதிகரித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
1991 முதல் 2020 வரையிலான சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது, இந்தியப் பெருங்கடல் வடபகுதியில் வெப்பநிலை 0.2% உயர்ந்துள்ளது.
நிலப்பரப்பில் இதன் விளைவாக வெப்பநிலை சுமார் 1.3°C அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த வெப்பநிலை உயர்வு இல்லாமல் இருந்திருந்தால், கடந்த மாதம் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை ஒரு டிகிரி குறைவாக இருந்திருக்கும்; அப்போது புயல்கள் இவ்வளவு தீவிரமாக உருவாகியிருக்காது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மழைக்காலங்களில் புயல்கள் உருவாகுவது இயல்பு என்றாலும், இப்போது காலநிலை மாற்றம் புயல்களின் சக்தியை அசாதாரணமாக அதிகரித்து வருகிறது என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
ராயல் நெதர்லாந்து வானிலை நிறுவனம் சாரா க்யூ கூறுகையில், “இவ்வாறு திடீரென வலுப்படும் புயல்களின் தன்மை இயல்பானதல்ல; இது மனிதச் செயலால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவு” என தெரிவித்துள்ளார்.
மேலும், காலநிலை மாற்றத்தால் மலாக்கா நீரிணையில் 50% வரை, இலங்கையில் 160% வரை மழை அதிகரித்திருப்பதை விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மாற்றங்கள் காரணமாக, சென்யார், டிட்வா போன்ற அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய புயல்கள் எதிர்காலத்திலும் உருவாகலாம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.