இந்தியாவில் 5 ஆண்டுகளில் ₹3.5 லட்சம் கோடி முதலீடு செய்ய அமேசான் அறிவிப்பு
அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் மொத்தம் ₹3.50 லட்சம் கோடி முதலீடு செய்யப் போவதாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் அமேசான் அறிவித்துள்ளது. இந்த முதலீடு, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) துறை வளர்ச்சிக்கும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கும் முக்கிய ஊக்கமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதலீட்டைக் கவனிக்க வேண்டும் எனத் தற்சமயம் அந்நாட்டின் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும், உலகத் தொழில்நுட்ப துறையில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்கள், குறிப்பாக அமேசான் போன்றவை, இந்தியாவில் தங்களது முதலீடுகளை அதிகரித்துவருகின்றன.
அமேசான் ஆனது e-commerce, cloud computing, digital streaming, AI உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகளவில் பெரிய சாதனைகளைப் பதிவு செய்து வருகிறது.
“Everything Store” என அழைக்கப்படும் இந்த நிறுவனம், தானே பொருட்களை விற்பனை செய்வதோடு, சில்லறை மற்றும் சிறு விற்பனையாளர்களுக்கும் தங்கள் தளத்தில் விற்பனை செய்ய வாய்ப்பளிக்கிறது. இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழில்முனைவோர் அமேசான் தளத்தின் மூலம் உலக நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. சுமார் 1.2 கோடி இந்திய சிறு வணிகங்கள் அமேசானின் மூலம் டிஜிட்டல் உலகில் இணைந்துள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், அமேசான் வழியாக இந்தியாவில் இருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டில் சுமார் 3 லட்சம் புதிய நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை 11 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள அமேசான், 2023 ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் நீண்டகால பங்களிப்பு செய்வதாக உறுதியளித்தது.
அமேசானின் மூத்த துணைத் தலைவர் அமித் அகர்வால், டிஜிட்டல் இந்தியா முயற்சியில் அமேசானும் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும், MADE IN INDIA பொருட்களை உலக சந்தைகளில் கொண்டு செல்ல தொடர்ந்தும் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.
இதற்காக 2030க்குள் மொத்தம் 35 பில்லியன் அமெரிக்க டாலர் — அதாவது ₹3.50 லட்சம் கோடி — இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், 1.5 கோடி சிறு வணிகர்கள் AI தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் இ-காமர்ஸ் ஏற்றுமதி 80 பில்லியன் டாலருக்கு உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் முழுவதும் உள்ள பள்ளிகள், மாணவர்கள், சிறு தொழில்முனைவோருக்கான AI கல்வி திட்டங்களையும் அமேசான் கொண்டு வர உள்ளது. மாணவர்களுக்கு தேவையான பாடத்திட்டங்கள், AI பயிற்சி, ஆசிரியர் பயிற்சிகள் போன்ற முயற்சிகளும் இதில் அடங்கும்.
ஃப்ளிப்கார்ட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ப்ளிங்கிட், ஜெப்டோ போன்ற நிறுவனங்களுடன் போட்டி அதிகரித்து வரும் நிலையில், தன் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் செயல்பாட்டு தளங்களை விரிவாக்குவதற்காக கூடுதலாக 233 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தையும் அமேசான் அறிவித்துள்ளது.