திருப்பதி தேவஸ்தான சால்வை வழங்கலில் கோடிக்கணக்கான மோசடி – புதிய அதிர்ச்சி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் வழங்கப்படும் பட்டு சால்வைகள் தொடர்பாகப் பெரும் அளவு நிதி முறைகேடு நடந்துள்ளது என வெளிவந்த தகவல் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த ஊழல் எந்த விதத்தில் நடந்தது? விவரம் பின்வருமாறு:
கடந்த ஆண்டு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டுக்களில் பயன்படுத்திய நெய்யில் மிருகக் கொழுப்பு கலந்து இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வழக்கு இன்னும் அமைதியடையாத நிலையில், தற்போது சால்வை விநியோகத்திலும் மோசடி நடந்தது என்பது புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி மலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதோடு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் போன்ற முக்கிய நபர்களும் தாராளமாக தரிசனம் செய்ய வருவதால், அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மரியாதையாக பட்டு சால்வை வழங்கப்படும். அதேபோல், ₹3000 மதிப்புள்ள சிறப்பு தரிசன சீட்டுகள் வாங்கும் பக்தர்களுக்கும் ரங்கநாயக மண்டபத்தில் இந்த சால்வை அணிவிக்கப்படுகிறது.
திருநாமம், சங்கு, சக்கரம் போன்ற தெய்வ சின்னங்கள் பொறிக்கப்பட்ட இந்தச் சால்வைகள் தூய பட்டு நூலால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை வாங்குவதும் டெண்டர் முறையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. 2015 முதல் VRS Export என்ற நிறுவனம் தேவஸ்தானத்துக்கு இச்சால்வைகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு சால்வைக்கும் ₹1,389 என நிர்ணயிக்கப்பட்ட விலையும் உண்டு.
சமீபத்தில், சால்வைகளின் தரம் குறித்து சந்தேகம் எழுந்ததால், அவை பெங்களூருவில் உள்ள மத்திய பட்டு வாரியத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. ஆய்வின் போது, 100% மல்பெரி பட்டு பயன்படுத்தப்பட வேண்டிய இடத்தில், முழுமையான பாலிஸ்டர் துணி பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட 180 கிராம் எடை, தூய பட்டு, மற்றும் சில்க் மார்க் முத்திரை—எதுவும் உண்மையில் இல்லாத நிலையில், போலியான சில்க் மார்க் பதித்து தேவஸ்தானத்தை ஏமாற்றியதாக VRS Export நிறுவனத்துக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
₹350 மதிப்புள்ள பாலிஸ்டர் சால்வைகளை ₹1,300க்கு விற்றதால், திருப்பதி தேவஸ்தானத்துக்கு மொத்தம் ₹54 கோடிக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
லட்டு மோசடி போலவே, இந்தச் சால்வை ஊழல் பிரச்னையும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளதால், இந்த வழக்கு தற்போது ஊழல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு மேலான விசாரணை நடந்து வருகிறது.