தமிழை உற்சாகமாகக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் உத்தரப்பிரதேச மாணவர்கள்!
வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்வின் மூலம், உத்தரப் பிரதேச மாணவர்கள் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவின் பல்வேறு கலாசாரங்களை மாணவர்கள் புரிந்து கொள்ளச் செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி, மொழித் தொடர்பை மேலும் வலுப்படுத்துகிறது.
புவியியல் ரீதியாக வெகுதூரம் பிரிந்திருந்தாலும், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தமிழ்நாடு மற்றும் காசி இடையே உள்ளது எனக் கூறப்படும் பழம்பெரும் இணைப்பை மறுபடியும் உயிர்ப்பிக்க, மத்திய அரசு ஆண்டுதோறும் இந்த விழாவை சிறப்பாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய கருக்குறிப்பை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த விழாவில், இந்த முறை தமிழ் மொழி கற்றல் முக்கிய அம்சமாக வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் கற்கலாம்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த 4.0 பதிப்பில், உத்தரப் பிரதேச மாணவர்கள் தமிழ் மொழியின் தொன்மையும் பண்பாட்டுத் தன்மையும் அதிக ஆர்வத்துடன் அறிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலிருந்து இந்தி தெரிந்த 50 தமிழ் ஆசிரியர்களை உ.பி. மாநிலத்திற்கு அழைத்து சென்ற மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், மாணவர்கள் VR தொழில்நுட்பத்தின் மூலம் தமிழை கற்றுக்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் வருடம் முதல் உத்தரப் பிரதேசத்தில் வகுப்பறை கற்பித்தலில் VR தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், அது காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கும் பெரிய ஆதரவாக அமைந்துள்ளது.
15 நாட்கள் நீடிக்கும் இந்த பயிற்சியில், தமிழ் மொழியின் அடிப்படைப் பாடங்களை கற்றுக் கொள்ளும் மாணவர்கள், விருப்பமிருந்தால் மேலும் ஆழமான கற்றலை தொடரவும் அந்த மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
நிகழ்ச்சி முடிந்த பின், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 15 முதல் 31 வரை தமிழ்நாட்டில் நிகழ்ச்சிகள் நடைபெறும். வாரணாசியிலிருந்து சுமார் 300 மாணவர்கள் பங்கேற்கும் இப்பயணத்தில், தமிழ் கலாசாரம், பழங்கால மரபுகள், பண்பாட்டு தொடர்புகள் போன்றவை இந்தி மொழி மாணவர்களுக்கு விரிவாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.