கோயில் நிலங்களில் கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும்
திருப்பரங்குன்றத்தின் மேற்பகுதியில் தர்கா இல்லை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து ஆளுநர் ஆர். என். ரவியை நேரடியாகச் சந்தித்த அவர், பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனு ஒன்றையும் வழங்கினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்து முன்னணி மைய அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த சட்டமன்ற கூட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் கல்லூரி, பள்ளி போன்ற கல்வி வளாகங்கள் அமைக்கும் வகையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த தீர்மானம், கோயில் நிர்வாகத்தில் ஊழல் நடைபெற வழிவகுக்கும் என்பதால், ஆளுநர் அதை மறுபரிசீலனை செய்து மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு வகிக்கத் தொடங்கிய பின், மொத்தம் 125 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.