தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பாக ரூ.62.51 கோடியில் 12 புதிய தோழி விடுதிகள் மற்றும் ரூ.27.90 கோடியில் கோயம்புத்தூர், திருச்சியில் புதிய கூர்நோக்கு இல்ல கட்டிடங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:
திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.62.51 கோடி மதிப்பில் 12 புதிய தோழி விடுதிகள் கட்டப்படுகின்றன.
அதேபோல், கோயம்புத்தூரில் உள்ள ‘பூஞ்சோலை’ அரசினர் கூர்நோக்கு இல்லம் மற்றும் திருச்சிராப்பள்ளி கூர்நோக்கு இல்லத்திற்கான புதிய கட்டிடங்களை ரூ.27.90 கோடி செலவில் கட்டுவதற்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டிய புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
சுகாதாரத் துறை முயற்சிகள்
சுகாதாரத் துறை சார்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 196 உதவியாளர்கள் மற்றும் 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர்களுக்கும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்த 19 திறன்மிகு உதவியாளர்-II (பொருத்துநர்–II) பணியிடத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நலனுக்காக ரூ.40 கோடி மதிப்பில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் மேமோகிராபி, இசிஜி கருவி, செமி-ஆட்டோ அனலைசர் உட்பட பல்வேறு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட, ரூ.1.10 கோடி செலவிலான ஒரு நடமாடும் மருத்துவ ஊர்தியையும் முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.