விரல் காயத்துடனும் நாக்-அவுட் போட்டிகளில் விளையாடினார் ரிச்சா கோஷ் — பயிற்சியாளர் தகவல்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ், விரலில் காயம் இருந்தபோதும் நாக்-அவுட் சுற்றில் விளையாடியதாக அவரது பயிற்சியாளர் ஷிப் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ரிச்சா கோஷ் இறுதி ஓவர்களில் அதிரடி ஆட்டம் காட்டி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்களிப்பு செய்தார். இதனால் நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.
இந்த நிலையில்தான் அவரது பயிற்சியாளர் ஷிப் ஷங்கர் கூறியதாவது:
“ரிச்சா என் மாணவி அல்ல; என் பெரிய மகள் மாதிரி. நான் த்ரோ செய்து பயிற்சி கொடுத்த அந்த பிள்ளை இன்று உலக சாம்பியன் ஆனிருக்கிறார். நாங்கள் எல்லோரும் மிகவும் பெருமைப்படுகிறோம்.
நாக்-அவுட் சுற்றில் அவர் இடது நடுவிரலில் ஹேர்லைன் கிராக் இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் வலியை தாங்கி பேட்டிங் செய்தார். அதுதான் அவரது மன உறுதி.
எப்போதும் ‘எந்த இடத்தில் பேட் செய்தாலும் உன் ஷாட்டில் நம்பிக்கை வை’ என்று நான் சொல்லுவேன். அவர் அதை நிரூபித்தார். அவரது வருகைக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”
உலகக் கோப்பை தொடரில் ரிச்சா கோஷ்
- 8 இன்னிங்ஸ்
- 235 ரன்கள்
- ஸ்ட்ரைக் ரேட்: 133.52
- 12 சிக்ஸர்கள்
என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் (185) எடுத்த வீராங்கனையாகவும் திகழ்கிறார்.