“இது முழுக்க பொய், திட்டமிட்ட சதி” – ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் அருண்பிரபு விளக்கம்
‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் கதை திருட்டு குற்றச்சாட்டை தீவிரமாக மறுத்துள்ள இயக்குநர் அருண்பிரபு, இது முற்றிலும் தவறானது மற்றும் திட்டமிட்ட சதி எனக் கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவர் நீண்ட விளக்கக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில اوர் கூறியிருப்பதாவது:
“பல வருடங்களாக உழைத்த கதையைப் பற்றிய இப்படியான அபத்தமான குற்றச்சாட்டு மனவருத்தத்தைக் கொடுக்கிறது. முதலில் இதைப் பார்த்தபோது, இணையத்தில் வந்த கூச்சலாக நினைத்தேன். ஆனால் முக்கிய ஊடகங்களும் இதைப் பற்றி செய்தியிட, பலரும் விளக்கம் கேட்டதால் உண்மையை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.”
“‘சக்தித் திருமகன்’ கதையை நான் 2014 முதல் எழுதத் தொடங்கியவன். அப்போது ‘பராசக்தி’ என்ற தலைப்பில் கிட்டு என்ற கதாபாத்திரம், அவரது திருச்சி அரசியல் சூழல், பெரியாரின் சிந்தனைகளால் வளர்க்கப்படும் சிறுவன், ரகசியமாக அதிகாரத்தை வைத்திருக்கும் வில்லன்—இவை அனைத்தும் அன்றே எழுதப்பட்டவை. காலத்திற்கேற்ற திருத்தங்களுடன் இது இன்று மக்களிடம் வந்துள்ளது.”
சமூக வலைதளங்களில் பரவும் குற்றச்சாட்டை பற்றி அவர் கூறினார்:
“இது 2022ல் வேறொருவரால் எழுதப்பட்ட கதை என்று கூறப்படுவது முற்றிலும் தவறு. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுக்கு கொடுக்கப்பட்ட சுருக்கத்திலிருந்து கதை திருடியதாக கூறப்படுவது சதி. எனக்குப் 2014 முதல் மின்னஞ்சல் பதிவுகள், திரைக்கதை பகிர்வுகள், பதிவு சான்றுகள், வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன. பல முன்னணி நடிகர்களுக்கும் கதையை நான் கூறியிருந்தேன். இவை அனைத்துக்கும் சாட்சிகள் உள்ளனர்.”
“ஒரு படத்தை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்குப் பிறகு இப்படி சதி குற்றச்சாட்டுக்கு ஆளாவதும் வேதனை. தேவையானால், அதிகாரப்பூர்வ இடங்களில் அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன். இந்த கருத்து பதிவை மக்களுக்கும் ஊடகத்திற்கும் என் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காக வெளியிடுகிறேன். இந்த பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.