ரஃபேல் போர் விமானத்தில் பறந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (அக்டோபர் 29) ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார். இது இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
அம்பாலா விமானப்படை நிலையம் சென்ற அவர், விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர், ரஃபேல் போர் விமானத்தில் சிறப்பு பாதுகாப்பு உபகரணங்களுடன் குறுகிய காலப் பறப்பை மேற்கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகை இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தது. அதில், “திரவுபதி முர்மு அவர்கள் அக்டோபர் 29ஆம் தேதி ரஃபேல் போர் விமானத்தில் பறக்கவிருக்கிறார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, 2023-ஆம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப்படைத் தளத்தில் இருந்து சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் அவர் பறந்திருந்தார். அதற்கு முன்னர், முன்னாள் குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோரும் சுகோய்-30 போர் விமானத்தில் பறந்திருந்தனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்த ரஃபேல் போர் விமானங்கள், 2020ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த போர் விமானங்கள், இந்தியாவின் வான்படை திறனில் முக்கியமான பலத்தை வழங்குகின்றன.