“எங்கு போனாலும் சர்ச்சைகள் என்னைப் பின் தொடர்கின்றன” — முகமது ஷமி
ரஞ்சி டிராபி தொடரில் குஜராத் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை 38 ரன்களுக்கு வீழ்த்தி பெங்காலுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த முகமது ஷமி, தன் உடல் தகுதி குறித்த விமர்சனங்களுக்கு மைதானத்திலேயே பதிலடி கொடுத்துள்ளார்.
அட்டகாசமான பந்து வீச்சில் இன்ஸ்விங்கர், பவுன்சர் போன்ற அவரது பழைய நுட்பங்கள் முழு துல்லியத்துடன் செயல்பட்டன. ஸ்விங் திறமையிலும் முந்தைய ஆட்டங்களை விட சிறப்பாக இருந்தார். இதன் மூலம் தன் உடல் மற்றும் ஆட்டத் தகுதியை நிரூபித்ததாகக் கூறலாம்.
இந்நிலையில் ஊடகங்களிடம் பேசிய ஷமி கூறியதாவது:
“இப்படிப் போட்டிகளில் சிறப்பாக ஆடுவது எனக்கு மனதிலும் உடலிலும் நல்ல ஆற்றலை அளிக்கிறது. கடினமான ஒரு காலகட்டத்திலிருந்து மீண்டு வந்து இவ்வாறு செயல்படுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. கடந்த ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு வலி நிறைந்த காலம். ஆனால் ரஞ்சி, ஐபிஎல், சாம்பியன்ஸ் டிராபி, துலீப் டிராபி ஆகியவற்றில் தொடர்ந்து விளையாடி, மீண்டும் பழைய ரிதத்தைப் பெற்றுள்ளேன்.
இது எனக்கு கம் பேக் போட்டி அல்ல; கடந்த ஆண்டு அதை அப்படிச் சொல்லலாம். ஆனால் இப்போதைய நிலைமையில் இது எனக்கு சிறப்பு வாய்ந்த மீள்நுழைவு.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான கேள்விகள் வருமென்று எதிர்பார்த்தேன். எங்கு சென்றாலும் சர்ச்சைகள் என்னைப் பின் தொடர்கின்றன. சமூக ஊடகங்கள் உண்மைகளை திரித்துக் காட்டுகின்றன. நான் செய்ய வேண்டியது என் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்துவதுதான். வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் சிறப்பாக விளையாட முயற்சி செய்கிறேன். மற்றவை எல்லாம் கடவுளின் கையில். பெங்கால் என் வீடு; ஒவ்வொரு முறை இங்கு ஆடுவது எனக்கு பெரும் பெருமை,” என ஷமி தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் அவர் எடுத்த 5 விக்கெட்டுகள் அவரது முதல் தர கிரிக்கெட்டில் 13வது ஐந்து விக்கெட் சாதனையாகும். இதன் மூலம் குஜராத் அணியை பெங்கால் 144 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தற்போது ஷமி 15 விக்கெட்டுகளுடன் விக்கெட் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.