“மோடி வலிமையான, பாராட்டத்தக்க தலைவர்; ஆனால்…” — ட்ரம்பின் சூசகப் பேச்சு!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலிமையானவர், மரியாதைக்குரியவர் என பாராட்டிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இந்தியா–பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் எனச் சொன்னதால் தான் நிறுத்தப்பட்டது” என்று கூறியுள்ளார்.
முன்னரும் இதே கூற்றை பலமுறை கூறிய ட்ரம்ப், மீண்டும் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசியா–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில் இதை மறுபடியும் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது:
“அணு ஆயுதம் கொண்ட இரண்டு வலிமையான நாடுகள் கடுமையாக மோதிக் கொண்டிருந்தன. நான் மத்தியஸ்தம் செய்தபோது இருவரும் போரை தொடர்வோம் என்றனர். மோடி மிகவும் நல்லவர், ஆனால் மிகக் கெடுபிடியானவர். அவரிடம், ‘நீங்கள் நான் பார்த்த மிகக் கெடுபிடியான நபர்’ என்றேன். போரைத் தொடர்ந்தால் வர்த்தக ஒப்பந்தம் இருக்காது எனச் சொன்னேன். பாகிஸ்தானுக்கும் அதையே தெரிவித்தேன். பின்னர் அவர்கள் இருவரும் எனக்கு அழைத்து, போரை நிறுத்துவதாகச் சொன்னார்கள்,” என்றார் ட்ரம்ப்.
அதோடு, “மோடியுடன் எனக்கு நெருங்கிய உறவு உள்ளது. அவருக்கு நான் பெரும் மரியாதை வைக்கிறேன். அதேபோல பாகிஸ்தான் பிரதமரும் திறமையான போராளி,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்பு டோக்கியோவில் பேசியபோதும், “இந்தியா–பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்; அப்போதைய மோதலில் 7 விமானங்கள் வீழ்த்தப்பட்டன” என்று கூறியிருந்தார். ஆனால் எந்த நாட்டின் விமானம் என்று அவர் ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” எனும் எதிர்தாக்குதலை நடத்தியது. இருநாடுகளுக்குமிடையே சில நாட்கள் நீண்ட மோதல் பின்னர் மே 10 அன்று முடிவுக்கு வந்தது.
இந்தியா–பாகிஸ்தான் போர் நிறுத்தம் இருநாடுகளின் நேரடி பேச்சுவார்த்தை மூலமே ஏற்பட்டது; மூன்றாம் தரப்பின் தலையீடு இல்லை என இந்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.