புஷ்கர் கண்காட்சியில் ரூ.23 கோடி எருமை – ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை கவனம் ஈர்ப்பு
அஜ்மீர்
ராஜஸ்தான் மாநிலத்தின் புஷ்கர் நகரில் நடைபெறும் ஆண்டு ஒட்டக மற்றும் கால்நடை கண்காட்சி இந்தாண்டும் விலங்கு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஒட்டகங்கள், குதிரைகள், எருதுகள், எருமைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டைய கண்காட்சியின் சிறப்பு — ரூ.15 கோடி மதிப்பிலான குதிரை மற்றும் ரூ.23 கோடி மதிப்பிலான எருமை பங்கேற்றுள்ளன.
ரூ.15 கோடி மதிப்புள்ள “ஷாபாஸ்” குதிரை
சண்டிகரைச் சேர்ந்த கேரி கில் என்பவருக்குச் சொந்தமான, மார்வாரி இனத்தைச் சேர்ந்த “ஷாபாஸ்” என்ற இரண்டரை வயது குதிரை, இந்த கண்காட்சியில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் கூறியதாவது:
“ஷாபாஸ் இதற்கு முன் பல கண்காட்சிகளில் பங்கேற்று விருதுகள் வென்றுள்ளது. இதை வாங்க பலரும் போட்டி போடுகின்றனர். இதுவரை ரூ.9 கோடி வரை விலை கேட்டுள்ளனர். இனப்பெருக்கத்திற்காக ஒரு முறைக்கு ரூ.2 லட்சம் கட்டணம் பெறுகிறோம்,” என்றார்.
ரூ.23 கோடி மதிப்புள்ள “அன்மோல்” எருமை
அதேபோல், ராஜஸ்தானைச் சேர்ந்த “அன்மோல்” என்ற எருமையின் விலை ரூ.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இது புஷ்கர் கண்காட்சியில் பங்கேற்றது.
இதுகுறித்து உரிமையாளர் கூறும்போது:
“அன்மோல் எருமைக்கு தினமும் நாட்டு நெய் மற்றும் உலர் பழங்கள் சேர்க்கப்பட்ட உணவு அளிக்கப்படுகிறது. 1,500 கிலோ எடை கொண்ட இது, இனப்பெருக்கத்தின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டி வருகிறது,” என்றார்.
கண்காட்சி விவரங்கள்
மேலும், ரூ.10 கோடி மதிப்புள்ள “பாதல்” என்ற குதிரையும், ரூ.25 லட்சம் மதிப்புள்ள “ராணா” என்ற எருமையும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
ராஜஸ்தான் கால்நடை வளர்ச்சித்துறை இணை இயக்குநர் டாக்டர் சுனில் கியா தெரிவித்ததாவது:
“இந்தாண்டு கண்காட்சி அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கியது. இது வரும் நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறும். இதுவரை 3,021 கால்நடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்றார்.