அம்மாவின் பிறந்தநாளை அடிப்படையாக வைத்து வாங்கிய டிக்கெட்: யுஏஇ லாட்டரியில் இந்தியருக்கு ரூ.240 கோடி பரிசு
அபுதாபி:
ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடைபெற்ற லாட்டரியில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.240 கோடி மதிப்பிலான முதல் பரிசு கிடைத்துள்ளது.
யுஏஇயின் முன்னணி நிறுவனம் “தி கேம் எல்.எல்.சி” பல்வேறு வகையான லாட்டரிகளை நடத்தி வருகிறது. இதன் சமீபத்திய குலுக்கல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது.
இதில் முதல் பரிசை பெற்றவர் இந்தியாவைச் சேர்ந்த அனில் குமார் பொல்லா (வயது 29) என அறிவிக்கப்பட்டுள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அனில் குமார் பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டார்.
“அம்மாவின் பிறந்தநாளை அடிப்படையாக வைத்து வாங்கிய டிக்கெட் தான் வென்றது”
அனில் குமார், லாட்டரி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“நான் இந்தியாவைச் சேர்ந்தவன். கடந்த 18 மாதங்களாக அபுதாபியில் பணியாற்றி வருகிறேன். சில நேரங்களில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவேன். சமீபத்தில் 12 டிக்கெட்டுகளை வாங்கினேன். அதில் கடைசியாக வாங்கிய டிக்கெட் — என் அம்மாவின் பிறந்தநாளை அடிப்படையாகக் கொண்டது. அதுவே முதல் பரிசை வென்றது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இந்த பரிசுத் தொகையில் இருந்து விலை உயர்ந்த காரை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். 7 நட்சத்திர ஓட்டலில் சிறப்பு விழாவாக கொண்டாடவிருக்கிறேன். இந்தியாவில் இருக்கும் என் தாய், தந்தையை யுஏஇக்கு அழைத்து வந்து, இங்கே குடும்பமாக வாழ விரும்புகிறேன். அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவேன். அதேசமயம், ஒரு பகுதி தொகையை தானமாக வழங்கப் போகிறேன்,” என்றார்.
“முதலில் நம்பவே முடியவில்லை”
யுஏஇ செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனில் குமார் கூறியதாவது:
“லாட்டரி நிறுவனம் என்னை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, ரூ.240 கோடி பரிசு கிடைத்திருப்பதாக தெரிவித்தது. ஆரம்பத்தில் நம்பவே முடியவில்லை. ஆனால் உண்மையென்பது உறுதியாகியதும் பேரானந்தத்தில் திளைத்தேன்,”
என்று தெரிவித்தார்.