சபரிமலை மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு
சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கான வசதிக்காக, தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இரா. மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் நடைபெறும் இந்த முக்கிய திருவிழாக்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அவர்களின் பயண வசதிக்காக, இந்த ஆண்டும் நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பம்பைக்கு சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி, டிசம்பர் 27 முதல் 30 வரை மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் என்பதால், டிசம்பர் 26 முதல் 29 வரை சிறப்புப் பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழுவாகச் செல்ல விரும்பும் பக்தர்களுக்காக வாடகை அடிப்படையிலான சிறப்புப் பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 60 நாட்களுக்கு முன்பே www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC Official App மூலமாக முன்பதிவு செய்யலாம்.
பேருந்து விவரங்கள் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு 94450 14452, 94450 14424, 94450 14463 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.