‘ப்ரோகோட்’ படத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை – பின்னணி என்ன?
நடிகர் ரவிமோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ திரைப்படத்தின் தலைப்பை பயன்படுத்துவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ரவிமோகன் தனது பெயரில் “ரவிமோகன் ஸ்டுடியோஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ‘டிக்கிலோனா’ இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், உபேந்திரா, கவுரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவும், ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைப்பும் செய்துள்ளனர்.
படத்தின் அறிமுக டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், டெல்லியைச் சேர்ந்த “இந்தோ-ஸ்பிரிட்” என்ற மதுபான நிறுவனம், தங்களது பிராண்டான ‘ப்ரோ கோட்’ (Pro Code) என்ற பெயரை திரைப்பட தலைப்பாகப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தது.
அந்த நிறுவனத்தின் மனுவில்,
“நாங்கள் 2015 முதல் ‘ப்ரோ கோட்’ என்ற பெயரில் மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். இது நுகர்வோரிடையே நம்பிக்கைக்குரிய பிராண்டாக உள்ளது. அதே பெயரை திரைப்படத் தலைப்பாக பயன்படுத்துவது எங்கள் வர்த்தக முத்திரை உரிமையை மீறும் செயல்; இதனால் பிராண்டின் பெயருக்கு பாதிப்பு ஏற்படும்,” எனக் கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேஜாஸ் காரியா,
“ஒரே வர்த்தக முத்திரை பெயர் வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டால், பொதுமக்களில் குழப்பம் உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் விதிமீறல் தென்படுகிறது,”
என்று கூறி, ‘ப்ரோகோட்’ தலைப்பை ரவிமோகன் ஸ்டுடியோஸ் பயன்படுத்துவதை இடைக்காலமாகத் தடை செய்தார்.
இதே பெயர் தொடர்பான பிரச்சினையில், முன்னதாக ரவிமோகன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அப்போது, அந்த நீதிமன்றம் ரவிமோகனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சமீபத்திய உத்தரவு குறித்து ரவிமோகன் தரப்பு விளக்கமளித்தது:
“இந்தோ-ஸ்பிரிட் நிறுவனம், தங்களது மதுபானத்தை ‘ப்ரோகோட்’ திரைப்படத்தில் பிரமோட் செய்யுமாறு எங்களை அணுகியது. ஆனால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் நாங்கள் மறுத்தோம். இதையடுத்து அவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினர்,” என தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த மதுபான நிறுவனம் தமிழ்நாட்டில் தங்கள் கிளையை தொடங்குவதற்கான விளம்பர முயற்சியாகவே இந்த வழக்கை தொடர்ந்ததாகவும் ரவிமோகன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.