கோவையில் உலகளாவிய ‘ஸ்டார்ட் அப்’ மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
‘ஸ்டார்ட் அப் தமிழ்நாடு’ அமைப்பின் சார்பில் நடத்தப்படும் உலகளாவிய ஸ்டார்ட் அப் மாநாடு, இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
“குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சியில் தமிழகம் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. இதற்கான சிறப்பான பங்கினை வகித்துள்ள அமைச்சர் அன்பரசனுக்கு நான் பாராட்டுச் தெரிவிக்கிறேன்.
இவ்வாறான தொழில் மாநாடுகள் தமிழகத்தின் மட்டுமல்லாது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வலு சேர்க்கின்றன,” என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“தமிழகம் அமைதியான சூழல், சிறந்த சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய காரணங்களால் முதலீட்டாளர்களின் விருப்ப மாநிலமாக மாறியுள்ளது.
மாநில அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய உறுதியாக செயல்பட்டு வருகிறது.
உலகின் முக்கிய புத்தொழில் (Startup) மையமாக தமிழ்நாட்டை உருவாக்குவது எங்கள் நோக்கம். தற்போது மாநிலத்தில் 12,000-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றில் பெண் தொழில்முனைவோர் பங்களிப்பு 50 சதவீதம் என்பது பெருமைக்குரியது,” என முதல்வர் கூறினார்.
மாநாட்டின் போது, முதல்வர் முன்னிலையில் பல பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் தொடங்கிய புத்தொழில் நிறுவனங்களுக்கு முழு மானியத்துடன் அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்தியாவைத் தவிர, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
மொத்தம் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், பல்வேறு தொழில்துறை வல்லுநர்கள் கருத்தரங்குகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குகின்றனர்.