2025 இலக்கிய நோபல் பரிசு – ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை தேர்வு
2025-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு, ஹங்கேரியின் பிரபல எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கைக்கு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது.
அவரது படைப்புகள் “பேரிழவு மற்றும் பயம் நிறைந்த சூழலின் மத்தியில், கலையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் ஆழமான பார்வையுடன் அமைந்துள்ளன” என்று அகாடமி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ருமேனிய எல்லைக்கு அருகில் உள்ள நகரத்தில் பிறந்த கிராஸ்னாஹோர்கை, தனது முதல் நாவலான ‘சாட்டான்டாங்கோ’ (Satantango) வினை 1985-ஆம் ஆண்டில் வெளியிட்டார். அதன்பின் அவர் ஹங்கேரி இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாக விளங்குகிறார்.
சமீபத்தில் அவர் எழுதிய ‘ஹெர்ஷ்ட் 07769’ என்ற நாவல், ஹங்கேரியின் சமூக குழப்பங்கள் மற்றும் அமைதியின்மையை நுணுக்கமாக சித்தரிப்பதாக இலக்கிய வட்டாரங்களில் பெரிதும் பாராட்டப்பட்டது. அவர் ஒரு சிறந்த திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.
நோபல் பரிசுகள் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இந்த வரிசையில்,
- அமைதிக்கான நோபல் பரிசு நாளை (அக்.10) அறிவிக்கப்படவுள்ளது,
- பொருளாதாரத்துக்கான பரிசு அக்.13 அன்று அறிவிக்கப்படும்.
பரிசு பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம், பட்டயம் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.1.03 கோடி) வழங்கப்படும்.
இந்த விருதுகள் அனைத்தும் ஆல்பிரெட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ஆம் தேதி வழங்கப்படும்.