ரஞ்சி கோப்பையில் 5 விக்கெட்டுகள் பறித்த ஷமி – குஜராத்தை 141 ரன்களில் வீழ்த்திய பெங்கால் அணி!
நடப்பு ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி 141 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. முதல் இன்னிங்ஸில் பெங்கால் அணி 279 ரன்கள் எடுத்தது. பின்னர் குஜராத் அணி 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் பெங்கால் அணி 214 ரன்கள் எடுத்ததையடுத்து, குஜராத் அணிக்கு 326 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த அணி 185 ரன்களுக்கு மட்டுமே ஆட்டமிழந்ததால், பெங்கால் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷமி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 10 ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் இன்னிங்ஸிலும் அவர் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
35 வயதான ஷமி, கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம் பெறவில்லை என்றாலும், இந்த ஆட்டங்களில் காட்டிய ஆட்டம் தேசிய தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்பு உத்தராகண்ட் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை எடுத்து, ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றிருந்தார் ஷமி.
அவரது சமீபத்திய பேட்டியில், ஷமி கூறியதாவது:
“ஒவ்வொரு வீரரும் நாட்டுக்காக விளையாட விரும்புவார். நானும் மீண்டும் அந்த வாய்ப்புக்காக தயராக உள்ளேன். என் பணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே. மற்றவை தேர்வாளர்களின் கையில் உள்ளது. ஃபிட்டாக இருந்து, நாட்டுக்காக மீண்டும் விளையாட விரும்புகிறேன்,” என்றார்.