உக்ரைனில் இந்திய போர் கைதி: ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்ட குஜராத் மாணவரின் பின்னணி
ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டதாக கூறப்படும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர், தற்போது உக்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னை பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். இது தொடர்பான பின்னணியை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை ஆரம்பித்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போருக்கு அமைதி வழி தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதேபோல், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் சமாதானத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய இராணுவத்தில் 127 இந்தியர்கள் இருந்ததாகவும், அதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் இந்தியாவிற்கு திரும்பியுள்ளதாகவும் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ரஷ்ய இராணுவத்தில் இருந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இந்திய மாணவர் ஒருவர், உக்ரைன் படையிடம் சரணடைந்ததாக உக்ரைனின் ‘தி கீவ் இன்டிபெண்டன்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த மாணவர் பேசிய காணொளியையும் உக்ரைன் அரசு வெளியிட்டது. அதில், குஜராத் மாநிலம் மோர்பி பகுதியைச் சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என தன்னை அறிமுகப்படுத்திய அவர், ரஷ்யாவின் ஐடிஎம்ஓ பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழி மற்றும் கலாச்சாரம் பயில மாணவர் விசாவில் ரஷ்யா சென்றதாக தெரிவித்தார். அங்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்தின் சார்பில் போரிட்டால், தன் சிறை தண்டனை ரத்து செய்யப்படும் என கூறப்பட்டதால், சிறையில் இருப்பதைத் தவிர்க்க ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அவர் விளக்கினார். 16 நாட்கள் ராணுவப் பயிற்சி பெற்ற பின்னர், கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி போர் களத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், மூன்று நாட்களுக்குள் ரஷ்ய தளபதியுடன் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து உக்ரைன் படையிடம் சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பின்னர், அவரை பேசச் சொல்லி உக்ரைன் ராணுவமே இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே காணொளியில், ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்தால் பணம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இறுதிவரை எந்த தொகையும் வழங்கப்படவில்லை என்றும் ஹுசைன் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவிற்கு திரும்ப விரும்பாத காரணத்தால் உக்ரைன் படையிடம் சரணடைந்து சிறை செல்லத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், கடந்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி, ஹுசைன் தனது சகோதரருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரஷ்ய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும், அதன் பிறகு அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது தாயார் கூறியிருந்தார்.
தற்போது, ஹுசைன் பேசிய மேலும் இரண்டு காணொளிகள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்றில், உயர்கல்வி அல்லது வேலைக்காக ரஷ்யா செல்லும் இந்தியர்கள், அங்கு போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத வழக்குகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் மிகுந்த கவனம் தேவை என எச்சரித்துள்ளார்.
மற்றொரு காணொளியில், தன்னை மீட்டு காப்பாற்றுமாறு பிரதமர் மோடியையும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்பே, ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்படும் எந்தவொரு சலுகைகளையும் இந்தியர்கள் ஏற்கக் கூடாது என வெளியுறவுத் துறை செயலாளர் மிஸ்ரி எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், கட்டாயம் அல்லது ஏமாற்று வழிகளின் மூலம் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.