ஹிந்து சமூக ஒற்றுமையே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை இலக்கு – மோகன் பகவத்
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் (RSS) குறித்து உலகளவில் அறிமுகம் இருந்தாலும், அதன் உண்மையான பணிகள் மற்றும் நோக்கங்கள் பலருக்கு இன்னும் தெளிவாகப் புரியவில்லை என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
RSS அமைப்பின் 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கொல்கத்தாவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். டெல்லி, பெங்களூரு நகரங்களுக்குப் பிறகு மூன்றாவது நகரமாக கொல்கத்தாவில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மோகன் பகவத், RSS-ஐ பாஜக அரசியல் கோணத்தில் மட்டும் பார்க்கும் அணுகுமுறை தவறான முடிவுகளை உருவாக்கும் என்று எச்சரித்தார். சங்கத்தின் உண்மையான தன்மையை அறிய விரும்பினால், அதன் செயல்பாடுகளை நேரில் அனுபவித்து புரிந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சாதி வேறுபாடுகளை ஒழிப்பது குறித்து பேசும் போது, சுவாமி விவேகானந்தர் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் சமூக சீர்திருத்த முயற்சிகளை அவர் நினைவுகூர்ந்தார். சுதந்திரத்திற்கு முன் அவர்கள் செய்த பணிகளின் தாக்கம் இன்றும் சமூகத்தில் காணப்படுவதாக மோகன் பகவத் குறிப்பிட்டார்.
மேலும், RSS தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்து விளக்கமளித்த அவர், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவோ அல்லது யாரையும் எதிர்ப்பதற்காகவோ இந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை என்றும், ஹிந்து சமூகத்தை ஒன்றிணைத்து, அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வழிவகுப்பதே RSS-இன் அடிப்படை நோக்கம் எனத் தெரிவித்தார்.