பனிக்குள் சிக்கிய மான் பாதுகாப்பாக மீட்பு!
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கி உயிர் ஆபத்தில் இருந்த மானை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான குளிர் வானிலை நிலவி வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழ் குறைந்ததால், சுற்றுப்புறம் முழுவதும் பனி மூடியது போல் காணப்படுகிறது.
பனிப்பொழிவு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், ஆறுகள் மற்றும் குடிநீர் தேக்கங்கள் வரை உறைந்து பனிக்கட்டிகளாக மாறியுள்ளன.
அந்த வகையில், இதாகா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் கடும் குளிரால் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒரு மான் பனியில் சிக்கி நகர முடியாமல் தவித்தது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு அந்த மானை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் அந்த மான் மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.
இந்த மீட்பு நடவடிக்கையைப் பதிவு செய்த காணொளி வெளியாகியுள்ள நிலையில், மனிதாபிமானத்துடன் செயல்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.