மார்கழி அமாவாசை விழா – சதுரகிரியில் திரண்ட பக்தர்கள்
மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில், பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது.
இந்தக் கோயிலுக்கு மாதத்தில் அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷம் ஆகிய குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வனத்துறை சார்பில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை நுழைவாயிலில் அதிகாலை முதலே திரண்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் கொண்டு வந்த உடைமைகள் வனத்துறையினரால் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னர் மலையேற அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 21 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த வழிபாட்டில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று இறைவனை தரிசனம் செய்தனர்.
மேலும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.